Pages

Wednesday, August 29, 2012

தேசிய திருக்குர்ஆன் மாநாடு , மலேசியா -3 இறுதி பாகம்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே...!

மலேசியாவில் நடைபெற்ற தேசிய திருக்குர் ஆன்  மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இனி...

உலக மயமாக்கலின் தாக்கத்தால் முஸ்லிம்களுக்கு நேர்ந்துள்ள அனுபவங்களும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் மெளலானா அப்துல் குத்தூஸ் அஸ்ஹரி (தலைவர் ஜாமியத்துள் உலமா , ஆஸ்திரேலியா ) அவர்களும் மெளலவி அப்துல் மாலிக் தேவ்பந்தி (இமாம் ஜாமியா சோலியா மஸ்ஜித் ,சிங்கப்பூர் ) அவர்களும் மெளலவி முஹம்மது மின்ஹாஜ் பேராசிரியர், ஆயிஷத்துல் சித்திகா பெண்கள் கல்லூரி , இலங்கை ) அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்..
இதில் உலகமயமாக்கலின் தாக்கத்தில் முக்கிய அம்சமாக அவர்கள் குறிப்பிட்டது

முதலாவது நாகரிக மோகத்தின் மூலம்  இஸ்லாமியர்களின்  உடையை சீரழிப்பது
இரண்டாவது அவர்களை அறியாமலே செய்யும் சிறு சிறு விஷயங்களில் ஷிர்க்கை கலப்பது..
மூன்றாவதாக உண்ணும உணவுகளில் ஹராமை கலப்பது... இவற்றை எல்லாம் சீரழித்து முஸ்லிம்களை அவர்களின் சுய அடையாளத்தை தொலைக்க வைத்து வேரருப்பதே உலக மயமாக்கலின் அடித்தளம் என்று அவர்கள் கூறியது எனக்கு புதியதொரு தகவலாய் இருந்தது...!!
இளையதலைமுறை நாகரிக மோகத்தில் சிக்குண்டு சீரழியாமல் இருக்க தலைமுறை இடைவெளி நிரப்பப்பட வேண்டும் என மெளலவி மின்ஹாஜ் அவர்கள் குறிப்பிட்டு சொன்னார்கள்...

அடுத்ததாக மனித சமுதாயத்தில் திருக்குர்ஆன் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ற தலைப்பில் பேசிய மெளலவி கம்பம் பீர் முஹம்மது பாகவி (எழுத்தாளர்,அழைப்பாளர்,கோலாலம்பூர் ) அவர்கள் நம் மக்கள் குர்ஆனை பொருள் உணர்ந்து ஓத வேண்டியதன் அவசியத்தை மிகத்தெளிவான முறையில் எடுத்துக் கூறினார்கள்.. அவரை தொடர்ந்து பேசிய அஷ்ஷேக் அகார் முஹம்மது (துணை இயக்குனர்,நளீமியா பல்கலைக்கழகம் ,இலங்கை ) அவர்கள் நம் இஸ்லாமிய பெருமக்கள்
திருமறையை வெறுமனே வாசிக்க மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள்
திருமறையில்  இருந்து கற்றுக்கொள்வதற்காக வாசிக்கவில்லை  என்று வருத்தத்துடன் கூறினார்கள்.. !

குர் ஆன் வசனங்கள் மனிதர்களிடம் மட்டும் அன்றி தாவரங்களிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதை துருக்கியில்  2003 ஆம் ஆண்டில் நடந்த திருக்குர்ஆன் மாநாட்டில் அங்கீகாரம் பெற்ற ஒரு ஆய்வை பற்றி தகவல்களை தெரிவித்தார்கள் மிகவும் சுவாரசியமான அந்த செய்தியில்... ஒரு ஆய்வுக்காக ஐந்து கோதுமை செடிகள் எடுத்துக்கொள்ளப்பட்டதாம்
அதில் முதல் செடிக்கு அருகில் குர்ஆன் வசனங்கள் மட்டுமே ஒலிபரப்பப் பட்டதாம் இரண்டாம் செடிக்கு அருகில் சாதாரண அரபி மொழியில் பேசும் உரையாடல்களும் ,மூன்றாம் செடிக்கு அருகில் எதையுமே ஒலிபரப்பாமலும் ,நான்காம் செடிக்கு அருகில் இசையும் , ஐந்தாம் செடிக்கு அருகில் மோசமாக திட்டக்கூடிய வசனங்களும் ஒலிபரப்பப் பட்டதாம் 


ஆய்வின் முடிவில் வியக்க வைக்கும் விஷயமாக மற்ற  செடிகளை விட குர்ஆன் வசனம் ஒலிபரப்பப்பட்ட செடி செழித்து வளர்ந்து இருந்ததாம்....!! :) சுபுஹானல்லாஹ்..!

அடுத்ததாக "இஸ்லாம் போபியா -விஷமங்களும் வெளிப்பாடுகளும்" -திருக்குர்ஆன் வழியில் முஸ்லிம்களின் கடமைகள் என்ற தலைப்பில் மிகவும் சிறப்பான முறையில் உரையாற்றிய பாரதி கிருஷ்ணகுமார் (எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர் ,சென்னை ) அவர்கள் தம உரையில்...
இஸ்லாமியர்களுக்கு எதிரான மொழி ஊடகங்களின் வழி எப்படி சிறுக சிறுக மக்களின் மனதில் விதைக்கப்பட்டது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கினார்...

ஆங்கிலேயர்,டச்சுக்கரர்கள், போர்த்துகீசியர் ஆகியோரின் படையெடுப்புகளை வருகை என்றும்.. இஸ்லாமியர்களின் வருகையை படையெடுப்பு என்றும் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு போதிக்கும் போதே  இஸ்லாம் மீதான வெறுப்பை விதைக்கும் வேலை   தொடங்கி விடுகிறது என்றார் அவர்.. மேலும்.. இஸ்லாமோபோபியாவுக்கு காரணம் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியே தவிர வேறில்லை என்றும்... இஸ்லாமியர்கள் என்றாலே நான்கு மனைவிகள் கொண்டவர்கள் என்றும் , தீவிரவாதிகள் என்றும் மேற்குலக ஊடகங்கள் மக்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கும் அவலத்தை துடைத்தொழிக்க வேண்டும் என்றார்..!

இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் பல இஸ்லாமிய புத்தகங்கள் காணாமல் போனது எத்தனை பேருக்கு தெரியும் என்று கேள்வி எழுப்பிய அவர்... பெட்ரோலை தாமிரத்தை இரும்பை திருடியவனே அந்த புத்தகங்களையும் திருடி  இருப்பான் என்று கூறிய போது கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது..

குஜராத்தில் சிப்பாய் கழகத்தில் வாளேந்தி முன்னிலை வகித்து தேச பக்தியோடு போராடிய முஸ்லிம்களுக்கு  இன்று அதே குஜராத்தில் நடக்கும் அநியாயங்கள் பற்றி வருத்தம் தெரிவித்த அவர்.. மேலும் பேசுகையில்..

சினிமாவிலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கை கடுமையாக சாடினார்.. அப்படிப்பட்ட படங்களை  பார்த்து அப்படி படம் எடுக்குறவன் நடிக்கிரவன் மூஞ்சில காரி துப்பிட்டு வந்தா அவன் ஏன் அரசியல் கட்சி ஆரம்பிச்சு நாட்ட கொள்ளையடிக்க போறான் என்று மக்களை பார்த்து கேள்வி எழுப்பிய அவர் உங்களுடன் அமர்ந்து தலைக்கு தொப்பி அணிந்து இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவன் எல்லாம் உங்கள் நண்பர்கள் அல்ல... உண்மையாக இஸ்லாமியர்களின் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள் அவர்களே உங்கள் உண்மையான நண்பர்கள் என்றார்... இறுதியாக

குறை சொல்வதற்கு இஸ்லாத்தில் ஒன்றும் இல்லை.. எனவே தீவிரவாதி என்ற முத்திரை திட்டமிடப்பட்டு மேற்குலகத்தால் முஸ்லிம்கள் மீது குத்தப்பட்டு சமூகத்தில் இருந்து அவர்களை மெல்ல மெல்ல பிரிக்கும் வேலை ஊடகங்கள் மூலமாக நடந்து கொண்டு இருக்கிறது அதை முறியடிப்பதே நம் கடமை என்றார்..

பிறப்பால் ஹிந்துவாக இருந்தாலும் எனக்கு மத நம்பிக்கை இல்லை.. எனினும் ஒற்றுமை எனும் கயிற்றை உங்களோடு பற்றிப்பிடித்து என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பாதுகாவலனாக என்றென்றும் இருப்பேன் என்று கூறி தன்னுரையை அவர் நிறைவு செய்த பொது எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது... இது போலவே அணைத்து மாற்று மத சகோதரர்களும் இஸ்லாத்தை இஸ்லாமியர்களை விளங்கி கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நினைப்பும் மனதின் ஓரம் எழாமல் இல்லை...!!

இறுதியாக பேச வந்தவர் மதிப்பிற்குரிய டாக்டர் கேவிஎஸ்.ஹபீப் முஹம்மது அவர்கள்.. இஸ்லாமோ போபியாவுக்கு காரணியாக விளங்கும் சில விஷயங்களை முன்வைத்தார்..!
அமெரிக்காவுக்கு எப்பொழுதும் ஒரு போது எதிரி தேவையாக இருந்து வந்திருகிறது என்ற வரலாற்றின் சில பக்கங்களை பற்றி எடுத்து உரைத்தார்..!
இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் கோவில்களை இடித்தார்கள் என்று சொல்லியே இஸ்லாத்தின் மீதான வெறுப்பை வளர்க்கிறார்கள்..! ஆம் இஸ்லாமியர் கோவில்களை இடித்தார்கள்.. அந்த கலாகட்டத்தில் வெற்றியின் அடையாளமாக அவர்களின் மதிப்பு மிக்க இடங்களை பறிப்பது வழக்கத்தில் இருந்த ஒன்று.! ஹிந்துக்களும் இதையே செய்தனர்.. அன்றைய காலகட்டத்தில் கோவில்கள் வழிபாட்டு தளமாக மட்டும் இருக்கவில்லை.. பல அரசு அலுவல்கள் நடைபெறும் இடமாகவும் இருந்ததால் அவற்றை அழிப்பது போரில் வெற்றியின் அடையாளமாக இருந்ததே தவிர வேறில்லை என்றும்... ஒளரங்கசீப் உடைய தளபதி ஒரு ஹிந்து இது பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும்.. வரலாற்றை திசை திருப்பி விட்டதன் மூலம் இஸ்லாமிய மக்கள் மீதான ஒரு காழ்ப்புணர்ச்சியை வேண்டும் என்றே மக்கள் மனதில் விதைக்கப்பட்டது எனவும் கூறினார்..!!

இஸ்லாமோபோபியாவுக்கு அடுத்த காரணியாக அவர் கூறியது மீடியாக்கள்..!!

மீடியாக்கள் எவ்வாறு மக்களை உண்மை செய்திகளை விட்டும் திசை திருப்பி கொண்டு இருக்கின்றன என்பதை ஒரு சில நிகழ்வுகளின் மூலம் விளக்கினார்..!

உதாரணமாக இரட்டை கோபுர வெடிப்புக்கு பிறகு பாலஸ்தீனிய மக்கள் இனிப்பு கொடுத்து அதை கொண்டாடுவதாக மீடியாக்கள் ஒரு புகைபடத்தை வெளியிட்டன ஆனால் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதோ 1991 ஆம் வருடம் வேறு எதோ ஒரு கொண்டாட்டத்தின் போது..! ஆனால் மீடியாக்கள் இஸ்லாமியர்கள் அமெரிக்காவின் வீழ்ச்சியை கொண்டாடுகிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்...அந்த புகைப்படம் மீடியாக்களில் வெளிவந்த போது இஸ்லாமியர் மீதான மாற்று மதத்தவர்களின் நல்லெண்ணத்தை தகர்த்தது..! மீடியாக்களின் இந்த DOUBLE STANDARD மாற்றப்பட வேண்டிய ஒன்று என்று அவர் கூறினார்..!

மேலும் பேசுகையில் அவர்..
இஸ்லாத்துக்கு எதிரான விஷ விதைகள் கருத்துகளாக மக்கள் மனதில் தூவ முயற்சிகள் எடுக்கப்படும் பொழுத நாம் உணர்ச்சி வசப்பட்டு அதை எதிர்க்கிற நேரம் அதுவே அவர்களுக்கு இலவச விளம்பரம் ஆகி விடுகிறது என்றார்..!

உண்மையை சொல்ல போனால்..

நீங்கள் வெறுக்கும் ஒன்றில் ஏராளமான நன்மைகள் இருக்க கூடும் என்ற இறைவனின் வசனத்துக்கு ஏற்ப.. இஸ்லாமொபோபியாவால் நமக்கு லாபமே தவிர நஷ்டம் இல்லை என்றும் நம்மை பற்றிய எதிர்மறை கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்பட்டாலும் சிந்திக்கும் திறன் பெற்ற அறிவுடைய மக்கள் உண்மையை அறிய இஸ்லாத்தை ஆழமாக உற்று நோக்க தொடங்குவார்கள் அதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம் ..! என்றும் கூறினார்...

தனது உரையை முடிக்கும் நேரம் அவர்கள் சொன்ன ஒரு கருத்து என்னவென்றால்..

இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு எதிர்வினைகள் புரிவதில் காலத்தை கழிக்காதீர்கள்.. உண்மையில் நம்மை நோக்கி வீசப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நம்மை திசை திருப்பும் முயற்சியே அன்றி வேறில்லை...இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.. நாம் மைனாரிட்டி சமூகம் என்ற என்னத்தை கை விடுங்கள் நாம் எல்லாம் மெஜாரிட்டி பை அவர் வேல்யூஸ்..! மீடியாக்களில் கவனம் செலுத்துங்கள்.. அல்ஜசீராவின் சாதனை நமக்கெல்லாம் ஒரு நல்ல உதாரணம்..! இஸ்லாத்தின் மீது இருக்கும் வெறுப்பை களைய வேண்டும் என்றால் அதற்கு முதலில் இஸ்லாத்தை தூய வடிவில் மற்றவர்க்கு எத்தி வைக்க வேண்டும்.! பொறுமையுடன் முயன்றால் வெற்றி நிச்சயம் இன்ஷா அல்லாஹ்... என்று கூறி தனது உரையை முடித்து கொண்டார்..!

அல்ஹம்துலில்லாஹ் அத்துடன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது..!

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டத்தோ இக்பால் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மற்ற உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து நினைவு பரிசினை வழங்கினார்கள்..! மாஷா அல்லாஹ் மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு அது..!

இரண்டு நாட்களுமே மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.. அல்ஹம்துலில்லாஹ்... நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற உறுதுணையாக இருந்தவர்களுக்கும், அதில் கலந்து கொண்டவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக...!! ஆமீன்..!வஸ்ஸலாம்
உங்கள் அன்பு சகோதரி
ஷர்மிளா ஹமீத்