Pages

Tuesday, September 25, 2012

இப்புடித்தான் இருக்க வேண்டும் ஆம்பளை ...!!

அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்..!

என்னடா இது எப்போ பார்த்தாலும் பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்குற உரிமைகள் , கடமைகள் பத்தியே பேசிக்கிட்டு இருக்கோமே..! ஆனா ஒருத்தர் கூட இந்த இஸ்லாமிய ஆண்கள் எப்படி இருக்கணும்? அவங்களோட உரிமைகள் கடமைகள் என்னன்னு சொல்ல மாட்டேன்கிறாங்களே அப்படின்னு மிகப்பெரிய குறை ஒன்னு இம்புட்டு நாளா மனச அரிச்சுகிட்டே இருந்துச்சுங்க..!

                      இன்னிக்கு சகோதரி நாசியா அவர்கள் இஸ்லாமிய பெண்மணியில் பகிர்ந்த பதிவு அந்த குறையை எல்லாம் அடிச்சு தூள் தூளாக்கிடுச்சு போங்க..!

ஒரு சில ஆண்கள் என்னதான் இஸ்லாம் இஸ்லாம் ன்னு வாய் கிழிய பேசுனாலும் நடைமுறைன்னு வரும் பொது சில விஷயங்கள்ல அலட்சியமா இருந்துர்றாங்க..! அதுல முதலாவதா வர்றது தாடி..! அது சுன்னத் தானே வாஜிப் இல்லையே என்ற அலட்சிய மனப்பான்மை பெரும்பான்மை ஆண்களிடம் இருக்கிறது..! மேலும்   வீட்டு வேலை என்றாலே எல்லா வேலையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்..! ஆண் என்பவன் பெண்ணுக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருக்க தேவை இல்லை என்று அசால்டாக (ஆணாதிக்க திமிருடன்) இருப்பவர்களும் உண்டு.. அது போன்ற ஆண்களுக்கெல்லாம் நறுக்கென்று தலையில் கொட்டு வைத்தது போல் இருக்கும் இந்த சகோதரியின் பதிவை பார்த்தால்..! அதிலும் மனிதர்குல மாணிக்கம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்... அவர்களே வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருந்தார்கள் என்பதை படிக்கும் உண்மையான முஸ்லிம் ஆண்கள் இனிமேல் மனைவிக்கு, தாய்க்கு, சகோதரிக்கு உதவியாக இருக்க போட்டி போட்டு வேலை செய்வார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயம் இல்லை..!!

முஹம்மது நபி ஸல் அவர்கள் வீட்டிலிருக்கும்போது என்ன செய்வார்கள் தெரியுமா? மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?! "உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே"

சகோதரி நாஸியாவின் பதிவை முழுவதும் வாசிக்க... >>இங்கே <<<

Monday, September 24, 2012

யூட்யூப் புறக்கணிப்பு.. !! சாத்தியமா??!!


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே..!
                    சர்ச்சைக்குரிய திரைப்படமான innocense of muslimsஎன்ற திரைப்படத்தின் ட்ரைலரை யூட்யூப் நீக்கும் வரை யூட்யூபை முழுவதுமாக  புறக்கணிக்குமாறு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்படுகிறது..! என்னை பொறுத்தவரையில் இது தவறான முடிவாகவே தோன்றுகிறது.. ஏன் என்பதை பார்ப்பதற்கு  முன் ஒரு சின்ன  பிளாஷ் பேக்..! 

                                 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட youtube தளம் ஆரம்பம் முதலே சூடு பிடிக்கத் தொடங்கியது...நிறுவனத்தை தொடங்கிய மூன்று இளைஞர்களில் ஒருவர் முஸ்லிம் என்பது கூடுதல் தகவல் :) . 2006 ஆம் ஆண்டு , அதாவது youtube தொடங்கி  ஒன்றரை வருடம் ஆன உடனே , Google நிறுவனம் அதை வாங்கியது...ஒன்றரை வயதான நிறுவனத்துக்கு google கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? 1 .65 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பின் படி சுமார் 7000 கோடி ரூபாய்க்கும் மேல். அந்த நேரம் வெறும் 100 பேர் கூட அந்த நிறுவனத்தில் பணிபுரியவில்லை... அப்படியெனில் ஒரு பணியாளருக்கு தலைக்கு 90 கோடி ரூபாய் அளவுக்கு மதிப்பு...!!!

                                வெறும் ஒன்றரை வயதான, நூறு பேர் கூட மொத்த பணியாளர்கள் இல்லாத, மூன்று கத்துக்குட்டிகளால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு ஏன் இவ்வளவு தொகையை கூகிள் அள்ளிக் கொடுத்தது ??? இதுதான் இன்டர்நெட் இன் அடுத்த பரிணாமம் என்பதை கூகிள் யூகித்தது தான் காரணம். நினைத்தபடியே youtube அசுர வேகத்தில் வளர்ந்தது. லாபத்தை அள்ளிக் கொடுத்தது.
google அல்லது youtube நிறுவனம் காணொளிகளை போட்டு யாரையாவது பார்க்கச் சொன்னதா? "இல்லை.. காணொளிகளை போடுவதும் பொதுமக்கள் தான்...அதைப் பார்ப்பதும் பொதுமக்கள் தான்" அதுதான் youtube இன் பலம்.

                                   இவ்வளவு சக்தி வாய்ந்த இந்த ஊடகத்தை முஸ்லிம்கள் கொஞ்சம் சரியாகப் பயன்படுத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்...மைக், ஆடியோ, வீடியோ, தொலைக்காட்சி , சினிமா என்று உலகில் அவ்வப்போது தோன்றிய எல்லா ஊடங்கங்களையும் கொஞ்சம் மெதுவாகவே பயன்படுத்த ஆரம்பித்த முஸ்லிம்கள் இந்த youtube தளத்தை நன்றாகவே பயன்படுத்தினார்கள். மாஷா அல்லாஹ்..!  எல்லா விஷயங்களிலும் இங்கே கிடைக்காத மார்க்க அறிஞர்களின் கருத்தே இல்லை எனலாம்...!

தற்போதைய நிலவரம்..

                                 Innocence of muslims என்ற பெயரில் பெருமானார் ஸல் அவர்களை இழிவுபடுத்த முயன்ற ஒரு வீடியோ இன்று நம்மை இந்த தளத்துக்கு எதிராக திரும்ப வைத்துள்ளது. உண்மையில் இந்தப் படம் வெறும் ஒரு சாம்பிள் மட்டுமே...பெருமானாரை பற்றிய மோசமான கருத்துடைய காணொளிகள் ஆயிரக்கணக்கில் இந்த தளம் முழுவதும் கிடைக்கிறது... பெருமானார் ஸல் அவர்கள் மட்டுமல்ல , ஈசா (அலை) , மூஸா (அலை) தொடங்கி இந்துக்களின் கடவுள்கள் என்று தொடங்கி எல்லா கடவுள் கொள்கைகளையும் விமர்சிக்கும், இடித்துப் பேசும், இழிவுபடுத்தும் வீடியோ க்கள் இந்த தளத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை நாம் கண்டுகொண்டால் இதற்கே ஆயுள் முழுவதும் போகும் சகோஸ்..அது தான் உண்மை...!!

                                சர்ச்சைக்குரிய படம் முழுவதும்(சுமார் இரண்டு மணி நேரத் திரைப்படம் ) எடுக்கப்பட்டு கலிபோர்னியா மாகாணத்தில் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது...படம் முழுவதும் விஷம் என்பதால் அமெரிக்கர்கள் இந்தப் படத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை... முழுக்க முழுக்க காலியான திரையரங்குகளில் சில நாள் மட்டுமே ஓடி பெட்டியில் படுத்துக் கொண்டது...இந்த விஷ சினிமாவுக்கு (இப்போது பிரபலமாக உள்ள 14 நிமிட வீடியோ அல்ல...முழுத் திரைப்படம் ) அமெரிக்கர்கள் கொடுத்த பேராதரவு அவ்வளவு தான்...!! இது புரியாமல் அமெரிக்கா என்றாலே இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் ஒரு கொடுங்கோல் கூட்டம் என்று ஒரு சில  சகோக்கள் சொல்கிறார்கள்... சின்னப் படங்களுக்கு கூட review எழுதுபவர்கள் கூட இதனை கண்டு கொள்ளவில்லை.

                                  திரைப்படம் ஓடவில்லை என்றவுடன் படம் எடுத்த விஷமிகளுக்கு ஒரு ஐடியா தோன்றியது. திரைப்படத்தை விட சிறந்த ஊடகமான youtube தளத்தை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது? உ டனே களத்திலிறங்கி திரைப்படத்தின் சில பகுதிகளை வெட்டி ஒட்டி ஒரு பதினான்கு நிமிட கிளிப்பிங் ஆக்கி youtube தளத்தில் உலாவ விட்டார்கள்...மறுபடியும் யாருமே கண்டு கொள்ளவில்லை...!!
              என்ன youtube தளத்தில் கூட யாருமே கண்டு கொள்ளவில்லை...என்ன செய்யலாம் என்று யோசித்த சதிக் கும்பல் மெகா திட்டம் ஒன்றை தீட்டியது...அதுதான் அதனை அரபியில் மொழி பெயர்த்து வெளியிடுவது என்பது...!!
                அரபியில் வெளியான திரைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக மின்னஞ்சல்கள் மூலமாகவும் facebook போன்ற தளங்கள் மூலமாகவும் பிரபலம் அடைய துவங்கியது...நெஞ்சைத் தொட்டுச் சொன்னால் பிரபலம் அடைய வைத்தோம் என்று தான் சொல்ல வேண்டும்...உச்ச கட்டமாக எகிப்தின் சில முன்னோடி தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ வின் பகுதிகள் காட்டப் பட்டன...
                       விளம்பரம் இல்லாமல் சதிகாரர்களின் வீடியோ வுக்கு நாமே விளம்பரம் செய்து, நமது தொலைக்காட்சியிலேயே காமித்து பெரும் விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம்...பின்னர் நடந்தவை அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள்...

      சரி துவக்கத்திற்கு மீண்டும் வருகிறேன்...சர்ச்சைக்குரிய வீடியோ "சாம் பசிலே " என்ற பெயரில் upload செய்யப்பட்டது...இன்றும் நம்மில் சிலர் சொல்வதைப் போன்று அல்லாமல் அந்த காணொளியை youtube நீக்கி பல நாட்கள் ஆகி விட்டது...
This video has been removed as a violation of YouTube's policy against spam, scams, and commercially deceptive content 
என்று தெரிவித்திருக்கிறது... ஆனாலும் இந்த தருணத்தை எதிர்பார்த்து இஸ்லாமிய எதிரிகள் இதனை டவுன்லோட் செய்து வைத்திருந்தனர்... அதனை இன்று வெவ்வேறு பெயர்களில் upload செய்கின்றனர்... copyright பிரச்சினைகளால் youtube தினமும் ஆயிரக்கணக்கில் வீடியோ க்களை நீக்குகிறது...நீக்கப்படும் ஒவ்வொரு வீடியோ வும் அடுத்த வினாடி மற்றொரு பெயரில் வெளி வருகிறது...இது அவர்களால் தடுக்க முடியாத ஒன்று...ஏன் தடுக்க முடியாத ஓன்று என்று அறிய அவர்கள் தளத்தின் புள்ளி விவரம் நான் தரவேண்டும்...youtube தளம் ஒவ்வொரு நாளும் மூன்று பில்லியன்(சுமார் முன்னூறு கோடி ) தடவை ஹிட் ஆகிறது... ஒவ்வொரு நிமிடமும் ..ஆம் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 48 மணி நேரம் நீளும் வீடியோக்கள் upload செய்யப்படுகின்றன...!
              இதே யூட்யூபில் எத்தனையோ தாவா செய்திகள் அனுதினமும் பதியப்படுகின்றன..! எத்தனையோ ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பகிரப்படுகின்றன..! அதை நமக்கு சாதகமாக உபயோகிப்போமே..!? நாம் உண்ணும உணவில் சிறு கல் தென்பட்டால் வீசி எறிய வேண்டியது அந்த கல்லைத்தானே ஒழிய ஒட்டு மொத்த உணவையும் அல்ல..! 

                 ஒரு பிரச்சனை என்று வந்த உடன் அந்த இடத்தை விட்டு ஒதுங்குவது விவேகமாகாது..! அதே இடத்தில் இருந்து அந்த சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப வேண்டும் அதுதான் நம் இப்போதைய கடமையும் கூட..! 
                                         அதெப்படி இந்த மோசமான சூழ்நிலையை நமக்கு சாதகமாக திருப்ப இயலும் என்கிறீர்களா?
இதுக்கும் ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கு..!
                   சர்ச்சைக்குரிய படம் வெளியாகி  ஒரு வித பதட்டமான சூழலில் உலகம் இருந்த போது கடந்த வாரம் உலகின் பிரசித்தி பெற்ற அமெரிக்க சஞ்சிகைகளில் ஒன்றான NEWSWEEK  கவர் ஸ்டோரி ஒன்று வெளியிட்டது. அதன் தலைப்பு  MUSLIM RAGE (முஸ்லிம் வெறி அல்லது முஸ்லிம் கொலை வெறி ). எழுதியவர் அயான் ஹிர்சி அலி.. இந்தப் பெண்மணி கடுமையான இஸ்லாமிய எதிர்ப்பாளர்.   போராட்டங்கள் நடந்த உடன் இஸ்லாத்தை விமர்சிக்கும் முன்னாள் முஸ்லிம் பெண்மணி ஒருவரை வைத்து பிரபல பத்திரிகை கட்டுரை வெளியிடுகிறது என்றால் எந்த அளவு முஸ்லிம்கள் மீது வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..!
                அதன் தலைப்பின் கீழ் " நான் எப்படி முஸ்லிம் வெறியிலிருந்து தப்பித்தேன்? எப்படி இந்த வெறியை முடித்து வைக்கலாம் " என்றெல்லாம் கேள்விகள் வைக்கப்பட்டுள்ளது... ஆனா மேட்டர் அதுவல்ல..! NEWS WEEK இன் இந்த சதியை எப்படி சமயோசிதமாக நம் சகோதரர்கள் முறியடித்தார்கள் என்பதுதான் ஹைலைட்..!

                           நியூஸ் வீக் பத்திரிக்கையின் கட்டுரை வந்த உடனே ஆரம்பித்தார்கள் வேலையை. twitter தளத்தில் நீங்கள் ஒரு தலைப்பிற்கு உடைப்பது நீங்கள் tweet செய்தால் # குறி போட்டு அந்த தலைப்பை நீங்கள் குறிப்பிட வேண்டும். இதே தலைப்பில் வேறு பலரும் tweet செய்தால் அது எல்லாமே ஒரு இடத்தில் வரும். #muslimrage என்ற தலைப்பில் உலக அளவில் தூதரகங்கள் எதிரில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் , வன்முறைகள் குறித்தும் கருத்து பகருங்கள் என்று நியூஸ் வீக் கூறியிருந்தது,
உடனே சுதாரித்த முஸ்லிம்கள் (மிகக் குறிப்பாக அமெரிக்க முஸ்லிம்கள் :)) இந்த தலைப்பில் நகைச்சுவை கலந்த செய்திகளை எழுதிக் குவித்தார்கள். அதில் பல செய்திகள் உண்மை . பல செய்திகள் நகைச்சுவை... இந்த தலைப்பு பிரபலம் அடைந்ததும் நிறைய மாற்று மத சகோஸ் கூட கருத்துத் தெரிவித்தார்கள்.

சில சாம்பிள்கள் உங்கள் பார்வைக்கு :


Man next to me on subway reading Koran on his Samsung Galaxy tablet just offered his seat to an older lady. #MUSLIMRAGE truly affects us ஆல்
சுரங்கப் பாதை train (Subway ) பயணத்தில் குரானை சாம்சுங் சிலேட்டுக் கணினியில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் தனது இருக்கையை ஒரு வயதான பெண்மணிக்கு விட்டுக் கொடுத்தார். #muslimrage முஸ்லிம் வெறி எல்லாரையும் பாதிக்கிறது :)


எனது நண்பரின் சின்ன வயது மகன் விமான நிலையத்தில் தொலைந்து விட்டான்...எப்படி கத்தி அவனை கூப்பிடுவது? அவனோட பேரு வேற ஜிஹாத் :) #muslimrage


குழந்தைகளுடன் பூங்கா ஒன்றில் அமர்ந்து ஒரு பெரிய முஸ்லிம் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது..எல்லோரும் ஒரே தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுகிறார்கள். நிறைய முஸ்லிம் வெறி இங்கே தென்படுகிறது என்று ஒருவர் அந்த புகைப்படம் போட்டு நக்கல் அடிக்கிறார்.
"There's a lot of #MuslimRage going on in this photo,")


நியூஸ் வீக் பத்திரிக்கையை இப்படி முஸ்லிம்கள் கோமாளி ஆக்கியது யாருக்குத் தெரியும் என்று நீங்கள் கேக்கலாம். எல்லோருக்குமே தெரிந்தது என்பது தான் சூப்பர் டூப்பர் வெற்றி :)

உலகின் பிரபல பத்திரிக்கைகள் இதனை கவர் செய்தன :)

உதாரணம்
http://www.salon.com/2012/09/17/newsweeks_muslim_rage_invites_muslim_humor/


அறிவியல் கட்டுரைகளில் உலகின் பிரதான பத்திரிகைகளில் ஒன்றான WIRED சஞ்சிகை கூட இவ்வாறு செய்தி வெளியிட்டது... (எதிர்க்குரல் Aashiq Ahamed இன் பதிவுகளில் WIRED பத்திரிக்கையை அவர் நிறைய மேற்கோள் காட்டுவார். ) http://www.wired.com/threatlevel/2012/09/muslimrage/

Comedy Ensues as Twitter Users Hijack Newsweek's #MuslimRage Hashtag | Threat Level | Wired.comwww.wired.com

                                     நாம் செய்யவேண்டியது எல்லாம் இதுதான் அவர்கள் நமக்கெதிராக செய்யும் சதிகளை கண்டு உணர்ச்சிவசப்படாமல் சமயோசிதமாக யோசித்து அந்த சதிகளை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விடுவதும் அதனை நகைப்புக்கு உள்ளாக்கி அவர்களை காமெடி பீசாக்குவதும் தான் 

வன்முறைகள் நமக்குத் தேவையே இல்லை.. !!!
                        இணையம் என்பது மாபெரும் கடல்...சந்தேகமே இல்லை... இந்த மாபெரும் கடலில் தான் நாம் மீன் பிடிக்க வேண்டும்...சுறாக்களையும் திமிங்கலத்தையும் கூட பிடிக்கலாம். நாம் சில குப்பைகளைப் பார்த்து விலகப் போகிறோமா? அது சரியா?
நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது எனதருமை சகோதர சகோதரிகளே..! சிந்தியுங்கள்..! செயல்படுங்கள்..!

டிஸ்கி : சமூக வலைத்தளத்தில் எங்கள் டீக்கடை குழுமத்தில் பதிவர் பீர் முஹம்மது அவர்கள் பகிர்ந்த பதிவை அவரின் வேண்டுகோளுக்கிணங்க சிலபல மாற்றங்களுடன் இங்கே மீள்பதிவாக இட்டு இருக்கிறேன்..! 

சகோதரர் பீர் உடைய வலைப்பூ முகவரி >>>இங்கே  <<<<

Saturday, September 22, 2012

அடப்பாவிங்களா..! இதுல கூடவா போலி தயாரிப்பாங்க ??


மார்க்கெட்டில் இருக்கும் பிரபல பொருட்கள் போலவே  தரம் குறைவான பொருட்களை உற்பத்தி செய்து மிகவும் குறைந்த விலையில் விற்பது சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல..!! அது நமக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் இவர்கள் தற்பொழுது சில காலங்களாக மக்களின் அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உணவுப்பொருட்களிலும் தங்கள் கை வரிசையை காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்??? இது சற்றே பழைய தகவல் என்றாலும் தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவே இந்த பதிவு..!

கடந்த சில மாதங்கள் முன்பு இங்கே மலேசியாவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போலி முட்டைகள் விற்கப்படுகிறது என்ற தகவலை கேள்விப்பட்ட போது நான் அது வெறும் வதந்தி என்றே நினைத்துக்கொண்டு இருந்தேன் தொலைகாட்சியில் அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடும் வரை..! ( அந்த செய்தி பார்த்ததில் இருந்து வீட்ல இருந்த முட்டைய எல்லாம் ஒரு சைன்டிஸ்ட் ரேஞ்க்கு ஆராய்ச்சி பண்ணது எல்லாம் வேற விஷயம் :) அந்த முட்டை முழுக்க முழுக்க கெமிக்கல்கள் மூலமாக உருவாக்கப்பட்டதாம்..!

போலி முட்டையை கண்டறிவது எப்படி ??

இப்பொழுதுதான் அந்த முட்டை பற்றிய பரபரப்பு எல்லாம் ஓய்ந்து பலர் அதை மறந்தும் விட்ட நேரத்தில்..! இன்று ஒரு மாத இதழில் படித்த செய்தியால் ஒரு சில நிமிடங்கள்  மூச்சே நின்று விட்டது..!

ஆம்..! பலவேறு இன மக்களின் அன்றாட உணவான அரிசியிலேயே இவர்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்..!! கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..! விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க..! இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது..!


மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கியதற்கு சமமாம்..!


என்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக இருக்க கூடும் இது போன்ற போலிகளை தயாரிப்பவர்கள்??
எவன் எக்கேடு கெட்டால் என்ன ?? எனக்கு தேவை பணம் என்று சுயலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு அடுத்தவரின் உயிருக்கும் அவருடைய உடல் நலத்திற்கும் கேடு வரும் என்று தெரிந்தே இது போன்ற செயல்களை செய்பவர்களை என்னவென்று சொல்வது..!!!? :(

வியாபாரம் செய்வதில் இஸ்லாம் கூறும் நெறிமுறைகள் என்ன??

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.
(அல்-குர்ஆன் 4:29)

அவன் வானத்தை உயர்த்தினான், நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான்! நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்துவிடாதீர்கள்!
அல்-குர்ஆன் 55: 7 8 மற்றும் 9
வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிக்கவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. உதாரணமாக நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தோமேயானால் அவர்களுக்கு அல்லாஹ் நபித்துவம் வழங்குவதற்கு முன்னரும், அவர்கள் மக்களிடையே பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் தான் ஈடுபட்ட வியாபாரத்தில் காட்டிய நேர்மையும், மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறாமல் செயல்பட்ட காரணத்தினாலும்தான். எனவே அவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றும் நாமும் வியாபாரத்தில் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்.அல்லாஹ்வின் கோபத்திற்குறிய மூன்று நபர்களை பற்றி நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனையுமுண்டு என்று கூறினார்கள். நஷ்டமடைந்த அம்மூவரும் யார்? என கேட்டபோது செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன். தனது வேட்டியை தரையில் படுமாறு அணிபவன். தனது வியாபார பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.)


பொய் சத்தியம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி  தரமிழந்த பொருட்களை விற்பவர்கள், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டும் மறுமையில் தூரப்படுத்தப்படுவார்கள். கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடை வீதிக்குச் சென்றபோது ஒரு வியாபாரியின் தானியக் குவியலுக்கருகே வந்து தனது கையை அந்த தானியக் குவியலில் விட்டபோது விரல்களில் ஈரம் பட்டது. அப்போது உணவு வியாபாரியே! இது என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள் மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூஹுரைரா (ரலி), நூல்:- முஸ்லிம்)
மேலும் சிலர் அதிக லாபத்துக்காக உணவுப்பொருட்களை பதுக்குவது உண்டு..! அப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது..!

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்று கூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா). 
இறுதியாக வியாபாரம் செய்பவர்களே உங்களிடம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுததான் இறைவனை அஞ்சிகொள்ளுங்கள்..! வியாபாரப்பொருட்களில் கலப்படம் செய்து அல்லது போலிகள் தயாரித்து அடுத்தவரின் உயிரோடு விளையாடாதீர்கள்..!!

உங்களின் வியாபாரம் செழிக்க இறைவன் போதுமானவன்..!

வஸ்ஸலாம்
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி..!
ஷர்மிளா ஹமீது.

Tuesday, September 18, 2012

உலக முஸ்லிம்களே..! உஷார்..!!!

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு "என்பார்கள் அந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களிலும் மீடியாக்களிலும் அடிபடும் அந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை பற்றிய செய்திகளை பார்க்கும் போதும் கேட்கும்போதும்..!!

பதிவுக்கு செல்லும் முன் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிக்க எண்ணி அவரை பற்றிய அவதூறான படத்தை தயாரித்து வெளியிட்டவர்களுக்கு என் கண்டனங்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் .!!

சம்மந்தப்பட்ட படத்தை பற்றிய தகவல்கள் கசிய தொடங்கியதும் ஒவ்வொரு சராசரி முஸ்லிமுக்கும் எந்த அளவு கோபம வந்ததோ அதை விட பன்மடங்கு  கோபம் எனக்குள்ளும் வந்தது..! ஆனால் அதை விட அதிகமான கோபம்  அந்த படத்திற்கு எதிரான வன்முறைகளில் இறங்கிய என் சகோதரர்கள் மீது வந்தது..!!

கோபப்பட்ட சகோதரர்களை குறை சொல்வதல்ல என் நோக்கம்..! அவர்களின் கோபம் நியாயமானதே..! ஆனால் அந்த கோபத்தை அவர்கள் வன்முறையாக வெளிப்படுத்திய விதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..!!

இதுவா நம் மார்க்கம் நமக்கு சொல்லி தந்தது? இதுவா நம் தூதர் நமக்கு கற்று தந்தார்கள்???


அபூ ஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான் என நபி ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். நூல்கள் : புகாரி , முஸ்லிம்
 


இறைதூதரை இழிவுபடுத்தியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவே வன்முறையில் இறங்கினோம் என்பவர்கள் சிந்திக்க மாட்டார்களா?? இழிவுபடுதினால் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதான் நல்ல முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டி இருக்க வேண்டியதுதான் அதுதான் ஒரு உண்மை முஸ்லிமின் கடமையும் கூட...! ஆனால் தேவையற்ற வன்முறையில் இறங்கி இதில் சம்மந்தப்படாத மனித உயிர்களை குடித்தது எந்த வகையில் இறுதி தூதர் மீதான உங்கள் அன்பை பிரதிபலித்திட முடியும்? அப்பாவியான ஒரு உயிரை கொல்வது மனித இனத்தையே கொன்றதற்கு ஒப்பாகும் என்ற இறை வசனம் கூட இவர்களுக்கு மறந்தது ஏனோ? கோபம் கண்ணை மறைத்த காரணம் தானோ?

அல்லாஹ் கூறுகிறான் :
(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் தவறு)களை மன்னிப்பார்கள். அல்குர்ஆன் 3 : 134 
 

இந்த இறை வசனம் கூடவா நினைவுக்கு வரவில்லை சகோதரர்களே?

இது போன்ற அவசர நடவடிக்கைகளால் யூத அரசாங்கம் விரித்து வைத்துள்ள வலையில் தாங்களாக போயி  சிக்கிக் கொள்ளாதீர்கள் என் அன்பு சகோதர சகோதரிகளே..! அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் இது போன்ற உங்கள் எல்லை மீறிய கோபத்தையும் அதன் மூலம் நீங்கள் அரங்கேற்றும் வன்முறைகளையும் தான்..! அதன் மூலமாக ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் உலகின் பார்வையில் வன்முறையாளர்கள் என சித்தரித்து நாம் அனைவரும் தீயவர்கள் என்ற விஷ விதையை உலக மக்களின் மனதில் விதைப்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம்,...!
இதை உணராமல் அவசரகதியில் செயல்களில் இறங்கி விட்டு நீங்கள் சிக்கிக்கொள்வதொடு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்திற்கே தீவிரவாதிகள். என்ற பட்டத்தை உங்கள் முன்யோசனை இல்லாத செய்கையால் பெற்று தந்து விடாதீர்கள் என்பதே உங்கள் அன்பு சகோதரியின் தாழ்மையான வேண்டுகோள் ..!!

எவனோ ஒருவன் படம் எடுத்தான் என்பதால் அமெரிக்க தூதரகத்தை தாக்குகிறோம் என்று எத்தனை ஆயிரம் பேர்களுக்கு அவர்களின் அரசாங்க காரியங்களுக்கு நாம் இடைஞ்சலாக இருந்து விட்டோம் சகோதர சகோதரிகளே.. அவர்களுக்கு எல்லாம்  ஏற்பட்ட பொருள் இழப்பு, உடல் அசதி மற்றும் மன உளைச்சல் இவை எல்லாம் சேர்ந்து இஸ்லாம் மீதான எதிர்மறையான எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து விடாதா?? யூதர்களின் கனவும் அதுதானே அதை நாமே முன்னின்று நிறைவேற்றியது போல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே..!

இதுவா நான் இஸ்லாத்தை மற்றவர்க்கு எடுத்து செல்லும் விதம்?? இதுவா இஸ்லாம் இனிய மார்க்கம் என்று மற்ற மக்களை நினைத்து அவர்களை இஸ்லாத்தின் பக்கம் நெருங்க வைக்கும்??

நாளையே இந்த படம் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு விடுகிறது என்றே வைத்துக்கொள்வோம்.. வன்முறையில் சிக்கி பலியான  உயிர்களுக்கு நாம் என்ன பதில் வைத்து இருக்கிறோம்??

எனவே சகோதர்களே இது போன்ற சென்சிடிவான எந்த விஷயத்திலும் முடிவெடுக்கும் முன் நம் மனதின் கூச்சலிடும் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு இது போன்ற சம்பவங்கள் நடக்க என்ன காரணம் என்பதை நம் மூளைக்கு அதாவது நம் அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுத்து யோசிப்போம்..! யூதர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் அவர்கள் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் நம் அருமை நாயகம் கண்மணி (ஸல்) அவர்களுடைய கண்ணியத்துக்கு எவராலும் இழுக்கு ஏற்படுத்தி விட முடியாது.. அவர்களின் நயவஞ்சக எண்ணம எல்லாம் இஸ்லாமியர்களை மற்ற மதத்தவர்களிடம் இருந்து பிரித்து ஒதுக்குவதே..! அதற்கு அவர்களிடம் தகுந்த காரணம் இல்லாத காரணத்தாலேயே நம்மை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தி ஒதுக்கும் வேளையில் இரகசியமாக பல திரைமறைவு வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன..விவேகமில்லாத வீரம் ஒன்றுக்கும் உதவாது என்பதை நினைவில் வைத்து அடுத்த அடியை கவனமாக எடுத்து வையுங்கள் என் அருமை சகோதர சகோதரிகளே ...!

நம் கண்மணி நாயகம் மீது நமக்குள்ள அன்பை வெளிப்படுத்த அவர்கள் கற்றுதந்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் போது... அவர்கள் காட்டி தராத வன்முறையில் இறங்கி நம் சமுதாயத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என் அருமை சொந்தங்களே..! 

என் அருமை சகோதர சகோதரிகளே மீண்டும் சொல்கிறேன் கண்மணி நாயகம் அவர்கள் மீதான நம் அன்பை நாம் வெளிபடுத்தும் விதம் அவர்களின் வாழ்கையை இம்மி பிசகாமல் பின்பற்றி வாழ்வதே ஆகும்..! அதுவே உலகிற்கு சிறந்த தாவா என்பதை நினைவில் வையுங்கள்..!


யார் மனதும் புண்படும்படி என் கருத்துகள் அமைந்து இருந்தால் ஏக இறையின் பொருட்டால் என்னை மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..!

இறுதியாக சமூக வலை தளத்தில் சகோதரர் ஒருவர் பதிந்து இருந்த துவாவுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்

யா அல்லாஹ் !!! சர்வ சக்தியும் படைத்த ரஹ்மானே...இதயங்களைப் புரட்டக் கூடியவனே ...

டெர்ரி ஜோன்ஸ் , நகுலா போன்றவர்களின் இதயங்களை இஸ்லாத்தின்பால் புரட்டுவாயாக !!

எங்கள் பொக்கிஷத்தை கொல்லப் புறப்பட்ட உமரின் இதயத்தை புரட்டியவனே !!! கண்மணி நாயகத்தின் குட்டியாப்பாவின் இதயத்தை அறுத்து தின்ற ஹிந்தாவின் இதயத்தைப் புரட்டியவனே !! கயமைத் தனனத்தில் மூழ்கிப் போயிருக்கும் இந்த இருவரின் இதயங்களை சத்திய இஸ்லாத்தின் பால் புரட்டுவாயாக !!!
எங்கள் வாட்கள், எங்கள் கோஷங்கள், எங்கள் போராட்டங்கள், எங்கள் இருபது கோடிகள் இதை சாதிக்காது ரஹ்மானே...உனது அருள், உனது வல்லமை மட்டுமே இதைச் செய்ய முடியும் யா அல்லாஹ் !!!

 ஆமீன் ஆமீன் .. யாரப்பல் ஆலமீன்..!


வஸ்ஸலாம்
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி

ஷர்மிளா ஹமீது

டிஸ்கி : இங்கே மலேசிய அரசாங்கமே யூட்யூபில் சம்மந்தப்பட்ட தரப்பிடம் பேசியதில் அந்த வீடியோவை இங்கே தடை செய்து விட்டார்கள்.. இருந்தாலும் யுட்யூபில் இருந்து அந்த வீடியோவை  நீக்காமல் இருப்பது குறித்து அரசாங்கம் வருத்தம் தெரிவித்து உள்ளது..! அந்த வீடியோவை நீக்க வலியுறுத்தி அரசாங்க தரப்பில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது..! விரைவில்  அந்த வீடியோ நீக்கப்படவேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..!

சம்மந்தப்பட்ட இந்த பிரச்சனைக்கு எவ்வாறு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு இருக்க வேண்டும் என்பதை என் சகோதரி அன்னு அருமையாக விளக்கி ஒரு பதிவிட்டு உள்ளார் அதையும் தவறாமல் வாசிக்கவும் அந்த பதிவிற்கான லிங்க் கீழே ..!

எப்படி பதில் தந்திருக்க வேண்டும்? 

இது போன்ற அவதூறுகளை எதிர்கொள்வது எப்படி என்பதை மிக தெளிவான முறையில் விளக்கிய என் சகோதரி நாசியாவின் பதிவு..!

அவதூறை எதிர்கொள்வது எப்படி?